ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் பலியாகினர். இதையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் இந்திய விமானப் படைகள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல்காளால் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் உருவானது. இருப்பினும், பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்து வைத்திருந்த விமானி அபிநந்தன் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பதற்றம் சற்று தணிந்துள்ளது. இந்தநிலையில் புல்வாமா தாக்குதலுக்கு இந்திய பாதுகாப்பு படைகளின் நிலைகளை மறுசீரமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
அடிக்கடி காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்வதால் அதனை கட்டுப்படுத்தும் பொருட்டு பாதுகாப்புகள் அதிகப்படுத்தப்படவுள்ளது. அதன் ஒரு பகுதியாக உள்நாட்டிலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்படவுள்ளது. எல்லை மற்றும் உள்நாட்டு பாதுகாப்புகள் மறு ஆய்வுகள் செய்யப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேம்படுத்தப்படவுள்ளன. இதனை செய்வதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும் இந்தியாவின் முப்படை தளபதிகளுக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ராணுவ தளபதி பிபின் ராவத்துக்கு ஏற்கெனவே இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் விமானப் படை தளபதி பி.எஸ்.தனோவா, கடற்படை தளபதி சுனில் லன்பா ஆகியோருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்குவது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பணியின் போது சம்பந்த படைகளே அவர்களுக்கு உள்பாதுகாப்பு வழங்கவும், அவர்கள் வெளியில் வரும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பாதுகாப்பு கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.