கொடி பிடிக்கும் தொண்டன் அதிமுகவின் புதிய பொதுச் செயலாளரைத் தீர்மானிப்பான் என நீதிமன்றம் வரையில் சட்டப் போராட்டம் நடத்தி வந்தார் முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி. இந்தநிலையில், அவர் திடீரென எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய்ந்ததை அவரது ஆதரவாளர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
கடந்த ஜனவரி 2ம் தேதி முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் கேசிபி. அந்தப் பதிவில், அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த வேண்டி மாநிலம் முழுவதும் பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக எனத் தலைப்பிட்டு, அ.இ.அ.தி.மு.க கழக தொண்டர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
எம்.ஜி.ஆர் அவர்களும் அம்மா அவர்களும் உருவாக்கிய விதிகளின்படி பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இதனை செயல்படுத்தும் விதமாக நமது கழக ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளை ஒன்றிணைக்க மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் வரும் வேளையில் செயல்படுவதற்கும் அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தல் பிரிவு என்று செயல்பட உள்ளது. ஊராட்சி, ஒன்றியம், நகரம், பேரூராட்சி, நகராட்சி,மாநகராட்சி மற்றும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமிக்க இருக்கிறோம்.
எம்.ஜி.ஆர் அவர்களும் அம்மா அவர்களும் கூறியதை போல் கொடி பிடிக்கும் தொண்டன் முடிவெடுப்பான் என்ற அடிப்படையில் உங்கள் பகுதியில் யார் யாருக்கு எத்தகைய பொறுப்புகளை வழங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை கீழ்க்கண்ட முகவரிக்கு குறுஞ் செய்தியாக எழுதி அனுப்பவும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில் அவருடைய திடீர் முடிவு குறித்துப் பேசும் ஈரோடு அதிமுக பொறுப்பாளர்கள், கட்சித் தலைமையை மீறி மத்திய அரசுக்கு எதிராகப் பேசியதால்தான் அவரைக் கட்சியை விட்டு நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கட்சி விதிகளின்படி தேர்தல் நடத்த வேண்டும் என்ற அவரது கோரிக்கை நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு எதிராகப் போகும் என்பதால், கொங்கு மண்டலத்தில் முக்கியமான அமைச்சர் ஒருவர் கே.சி.பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மீண்டும் ஈரோடு தொகுதியில் எம்பி சீட் கொடுப்பது, தேர்தல் செலவுகளைப் பார்த்துக் கொள்வது உட்பட பல்வேறு வாக்குறுதிகள் அவருக்குக் கொடுக்கப்பட்டன. எடப்பாடி பழனிசாமியை எதிர்த்தவர்கள் ஒவ்வொருவரும் வீழ்த்துப்படுவதை அறிந்த கேசிபியும் இந்த வாக்குறுதிகளுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். ஈரோடு தொகுதிக்கு அவரை முன்னிறுத்தும் வேலைகளும் தொடங்கிவிட்டன என்கிறார்கள்.
-எழில் பிரதீபன்