மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் கனிமொழி மட்டுமே விருப்ப மனு செய்த நிலையில் அவரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். இதனால் தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட பல மாதங்களுக்கு முன்பே முடிவு செய்த கனிமொழி அத் தொகுதியில் தேர்தலுக்கான ஆரம்பக் கட்ட பணிகளையும் ஏற்கனவே முடுக்கிவிட்டுள்ளார்.
இதனால் திமுகவில் விருப்ப மனு பெற்ற போது தூத்துக்குடி தொகுதியில் திமுகவில் கனிமொழியைத் தவிர வேறு யாரும் விருப்ப மனு செய்யவில்லை.
இன்று தூத்துக்குடி தொகுதிக்கான வேட்பாளரை தேர்வு செய்ய நேர்காணல் நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேர்காணலில் ஆஜரான கனிமொழி தொகுதியில் தமக்குள்ள வெற்றி வாய்ப்புகள் குறித்து எடுத்து வைத்தார்.
தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும் களமிறங்க திட்டமிட்டுள்ளதால் நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது தூத்துக்குடி. இதனால் பிரச்சாரத்திலும் அனல் பறக்கும் என்பது நிச்சயம்