மேற்கு வங்க தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை, அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்டார். இதில், 41% பெண்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை, அதன் தலைவர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் வெளியிட்டார். இதில், 41 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இப்பட்டியலில், தற்போது எம்.பி.யாக உள்ள பத்து பேருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை. வங்க நடிகைகள் மிமி சக்ரவர்த்தி, நுஸ்ரத் ஜகான் ஆகியோர் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளனர். பீர்பம் தொகுதி எம்.பி.யாக உள்ள நடிகை சதாப்தி ராய், மீண்டும் அதே தொகுதியில் நிற்கிறார்.
வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பேசிய மம்தா பானர்ஜி, கடந்த முறை 35% பெண்களுக்கு வாய்ப்பு தந்தோம்; இம்முறை 41% என்று அதிகரித்துள்ளோம். மொத்தமுள்ள 42 தொகுதிகளிலும் வெல்வதே எங்கள் இலக்கு என்றார்.