நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியின் பேச்சை, உணர்ச்சிகரமாக தங்கபாலு மொழி பெயர்த்தார் என்று, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம், புதனன்று நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி ஆங்கிலத்தில் பேசினார்; தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு, ராகுலின் ஆங்கில உரையை தமிழில் மொழி பெயர்த்து பேசினார்.
ராகுல் ஒவ்வொரு வாக்கியத்தையும் பேசி முடிக்க, அதே வேகத்தில் ஆக்ரோஷமாக தங்கபாலு பேசி முடித்தார். அத்துடன், ராகுல் பேசியது ஒன்றாகவும், தங்கபாலு மொழிபெயர்த்து பேசும் போது வேறு மாதிரியாகவும் இருந்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது.
உதாரணமாக, காஷ்மீர் மக்களுக்கான காப்பீட்டு திட்டம் முழுவதும் அனில் அம்பானியிடம் மோடி ஒப்படைத்து விட்டதாக, ராகுல் ஆங்கிலத்தில் கூறினார். இதை தங்கபாலு, இந்திய நாட்டின் முக்கியமான பகுதியாக இருக்கும் ஜம்மு காஷ்மீர், அனில் அம்பானியின் கையிலே ஒப்படைக்கப்பட்டு விட்டது என்றார்.
அனில் அம்பானி ஒருபோதும் விமானம் தயாரித்ததில்லை என்று ராகுல் கூறியதை, அனில் அம்பானி ஒரு போதும் உண்மை பேசியதில்லை என்று தங்கபாலு, தமிழில் மொழி பெயர்த்தார். இதை, சமூக வலைதளங்களில் பலரும் கேலி, கிண்டல் செய்தனர். தங்கபாலுவை வைத்து, பல மீம்ஸ்களும் வெளிவந்தன.
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறுகையில், மொழிபெயர்ப்பு என்பது வரிக்கு வரி அப்படியே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒருவர் சொல்லும் கருத்தை மக்களுக்கு புரியும்படி, கூறினால் போதுமானது. வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்க்காமல், கருத்து இருந்தால் போதுமானது
அந்த வகையில், ராகுலின் பேச்சை தங்கபாலு சிறப்பாகவே மொழிபெயர்த்தார். அவரது மொழிபெயர்ப்பு மிகவும் உணர்ச்சிகராக இருந்தது என்றார்.