தமது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாக பேசியதற்கு 4 நாட்களில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் கிரிமினல் வழக்கு தொடர்வேன் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பொள்ளாச்சி சம்பவத்தில் தன்னையும், தன் குடும்பத்தினர் மீதும் வீண் பழி சுமத்தி திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக துணை சபாநாயகர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீதும் குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
பொள்ளாச்சி ஜெயராமனின் பேட்டியால் தம்முடைய நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளதாகவும், தமக்கும், தமது குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறி சபரீசன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நீலகண்டன் என்ற வழக்கறிஞர் மூலம் அனுப்பியுள்ள நோட்டீசில் 4 நாட்களுக்குள் பொள்ளாச்சி ஜெயராமன் தான் பேசியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். பொது வெளியில் பேசியதற்கு அதே மாதிரி பொது வெளியில் பகிரங்கமாக பேசியதை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டும்.
குறிப்பிடும் சேவை அமைப்பு ஒன்றுக்கு ரூ 50 ஆயிரம் வழங்க வேண்டும்.4 நாட்களுக்குள் மன்னிப்பு கோரவில்லை எனில் சட்டப்படி கிரிமினல் வழக்குத் தொடரப்படும் என சபரீசன் அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீசில் தெரிவித்துள்ளார்.