`2 லட்சத்தைக் கொடுத்து காரை வாங்கிக்கொள் - மாடல் அழகியால் குளியலறையில் சிக்கிய இளைஞர்

model stolen car in yelagiri

by Sasitharan, Mar 14, 2019, 22:47 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த தட்டக்கல் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (39). இவருக்குத் திருமணமாகி, மனைவி மற்றும் 3 வயதில் மகன் உள்ளனர். ஒரு மாதத்திற்கு முன்பு, சக்திவேலின் மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைபெற்று வீடு திரும்பிய இடைப்பட்ட நாள்களில், மருத்துவமனைக்கு வந்திருந்த வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த பாலியல் தொழில் செய்து வந்த சீனு என்பவருடன், சக்திவேலுக்கு நட்பு ஏற்பட்டது. அவர்மூலம் சக்திவேலுக்கு சில பெண்களின் அறிமுகம் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த சக்திவேலின் மனைவி, சண்டை போட்டுள்ளார். சக்திவேலின் நடவடிக்கைகள் மாறாததால் குழந்தையைத் தூக்கிக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார் அவரது மனைவி.

இந்த நிலையில், சீனு மூலம் தஞ்சையைச் சேர்ந்த சுவேதா (26) என்ற மாடல் அழகி சக்திவேலுக்கு அறிமுகமானார். அந்தப் பெண்ணை, வேலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான ஏலகிரி மலைக்கு, சக்திவேல் தன்னுடைய காரில் நேற்று மாலை அழைத்துச்சென்றார். ஏலகிரி மலை மேட்டு கனியூரில் உள்ள லாட்ஜில் அறை எடுத்துத் தங்கினர். அப்போது, சக்திவேல் குளியலறை சென்றார். உடனடியாக அந்தப் பெண், குளியலறைக் கதவைப் பூட்டினார். பின்னர், சக்திவேலின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த பணம் மற்றும் கார் சாவியை எடுத்துக்கொண்டு வேக வேகமாக லாட்ஜிலிருந்து வெளியே வந்தார். அங்கு நிறுத்தியிருந்த சக்திவேலின் காரை எடுத்துக்கொண்டு சுவேதா தப்பிச்சென்றார். குளியலறைக்குள் சிக்கிய அவர், செல்போன் மூலம் போலீஸ் அவசர எண் 100-ஐ தொடர்புகொண்டார்.

இதுபற்றி ஏலகிரி போலீஸாருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார், நள்ளிரவில் அந்த லாட்ஜுக்கு சென்று, குளியலறையில் தவித்துக்கொண்டிருந்த அவரை மீட்டனர். காரை கடத்திச்சென்றதாக கூறப்படும் அந்தப்பெண் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். சக்திவேலின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், ‘‘தனக்குச் சேரவேண்டிய ரூ.2 லட்சத்தைக் கொடுத்துவிட்டு, உன்னுடைய காரை வாங்கிக்கொள்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுபற்றி சக்திவேலிடம் நடத்திய விசாரணையில், ‘‘பாலியல் தொழிலாளிகளுடன் தொடர்பு வைத்துள்ளதாகக் கூறப்படும் சீனுவின் உறவினருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக சக்திவேல் கூறியிருக்கிறார். இதை நம்பி, அவர்கள் ரூ.2 லட்சத்தைக் கொடுத்திருக்கிறார்கள். பணத்தைப் பெற்றுக்கொண்ட சக்திவேல், வேலை வாங்கித் தரவில்லை. பணத்தை திரும்பக் கேட்ட சீனுவை, அவர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சீனு, மாடல் அழகி மூலம் சக்திவேலின் காரை கடத்தியது, தெரியவந்திருக்கிறது. மாடல் அழகியான சுவேதா மற்றும் சீனுவை போலீஸார் தேடிவருகிறார்கள்.

You'r reading `2 லட்சத்தைக் கொடுத்து காரை வாங்கிக்கொள் - மாடல் அழகியால் குளியலறையில் சிக்கிய இளைஞர் Originally posted on The Subeditor Tamil

More District news News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை