அமமுக சார்பில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பெயர் நாளை காலை அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
39 மக்களவைத் தொகுதிகளில் ஒரு தொகுதியை மட்டும் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒதுக்கிவிட்டு 38 தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடைபெற உள்ள 18 சட்டசபைத் தொகுதிகளிலும் தனித்து களம் இறங்கத் தயாராகி விட்டது அமமுக.
வரும் 19-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்க உள்ள நிலையில் திமுக கூட்டணியில் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு முடிவடைந்தாலும் திமுக வேட்பாளர்கள் பெயர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
அதிமுக கூட்டணியிலோ தொகுதி ஒதுக்கீடே இன்னும் இழுபறியாகவே உள்ளது. ஆனால் ஆரம்பம் முதலே கூட்டணி விஷயத்தில் அமைதி காத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் வந்த அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பைக் காட்டத் தொடங்கி விட்டார்.
ஜெயலலிதா பாணியில் முதல் ஆளாக ஒட்டுமொத்தமாக 38 மக்களவை மற்றும் இடைத் தேர்தல் நடைபெற உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியல் நாளை வெளியிடப்படும் என தினகரன் அறிவித்துள்ளார்.