கடந்த 5 ஆண்டில் நமது எம்.பிக்களின் செயல்பாடு எப்படி? என்பது குறித்த ஆய்வில் தமிழக எம்.பிக்களுக்கு கடைசி இடத்துக்கு முந்தைய இடம் கிடைத்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கேரளா எம்.பி.க்களின் செயல்பாடு படு சூப்பர் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் 17- வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந் நிலையில் கடந்த 16-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது வரை எம்.பி. என்ற கோதாவில் வலம் வரும் நமது மக்கள் பிரதிநிதிகளின் 5 ஆண்டு செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.நாடு இருவதும் 25 மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் 20 ஆயிரம் பேருக்கும் மேற்பட்ட பொதுஜனங்களிடம் கருத்துக் கேட்கப்பட்டு அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது.
சி வோட்டர்ஸ் மற்றும் ஐஏஎன்எஸ் இணைந்து நடத்திய இந்த ஆய்வில் தமிழக எம்.பி.க்களின் செயல்பாடு தான் படு மோசம் என்ற அதிர்ச்சித் தகவல். தமிழகத்தில் 27 ஆயிரம் பேரிடம் கருத்து கேட்டதில் தமிழக எம்.பி.க்களின் செயல்பாட்டில் திருப்தியே இல்லை என்று 43 சதவீதம் பேரும், ஓரளவுக்கு திருப்தி என்று 18.2% பேரும், மற்றவர்கள் ஏனோ தானோ என்றும் பதிலளித்துள்ளனர். நிகர திருப்தி என்ற அளவில் மைனஸ் 1.5 மார்க் எடுத்து தமிழக எம்.பிக்கள் 25 மாநிலங்களில் கடைசி இடத்துக்கு முந்தைய 24-வது இடம் பிடித்து மகா மோசமான சாதனை படைத்துள்ளனர். கடைசி இடம் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு கிடைத்துள்ளது.
இந்த ஆய்வில் கேரள எம்பிக்களின் செயல்பாடு தான் சூப்பரோ சூப்பர் என்றும் முதலிடம் பிடித்துள்ளனர். அதற்கடுத்தடுத்த இடங்களில் ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா எம்.பி.க்கள் இடம் பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது உள்ள எம்.பி.க்களில் 37 பேர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மற்ற இருவர் .இந்த லட்சணத்தில் செயல் படுவதற்குத்தானா இப்போது நடக்கப் போகும் தேர்தலில் போட்டியிட இத்தனை களேபாரங்கள் என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.