'பிக் பாஸ்' முதல் சீசனில் அதிக கவனம் ஈர்த்தவர்களில் ஒருவர் நடிகை காயத்ரி ரகுராம். தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குநரான இவர் அரசியலிலும் இயங்கி வருபவர்.
காயத்ரி ரகுராம் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். சமீப காலமாக, சமூக வலைதளத்தில் இவருடைய கருத்துகள் அதிக எதிர்வினையை ஏற்படுத்தி வருகிறது. பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை மீது இவர் தொடர்ச்சியாக கடுமையான விமர்சனங்களை வீசி வருகிறார்.
கடந்த டிசம்பர் மாதம், காயத்ரி ரகுராம் `Drunk and Drive' புகாரில் போலீஸில் சிக்கியதாகச் செய்திகள் வெளியாகின. `நான் அன்று இரவு ஆல்கஹால் குடிக்கவில்லை. ஜலதோஷம் பிடித்ததால் சிரப் குடித்தேன். அதனால் ஆல்கஹால் சோதனையில் பாசிடிவ் வந்திருக்கலாம்’ என்று காயத்ரி தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.
காயத்ரி ரகுராம் தன்னை பா.ஜ.க நிர்வாகி என்று கூறி கொள்வதால், தமிழிசையிடம் இந்த விவகாரம் பற்றி செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர், `காயத்ரி ரகுராம் நீண்ட நாள்களாக கட்சி செயல்பாட்டில் ஈடுபடவில்லை. அவர் பா.ஜ.க-விலேயே இல்லை. அவர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாரா என்பது பற்றியெல்லாம் எனக்கு தெரியாது’ என்று பதிலளித்தார்.
இதனால் கோவமடைந்த காயத்ரி `இது ஒரு தேசியக் கட்சி. என்னை வெளியே நீக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை’ என்று ட்வீட் செய்தார். `தமிழிசையை பா.ஜ.க மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கினால்தான் கட்சி முன்னேறும்’ என்று கருத்து தெரிவித்தார். காயத்ரி ரகுராமின் இந்தக் கருத்து இணையத்தில் எதிர்வினைகளை ஏற்படுத்தின.
இந்நிலையில் தற்போது மீண்டும் காயத்ரி தமிழிசை குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். ட்விட்டரில் தமிழிசை தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று ஒருவர் காயத்ரியிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஆம், இல்லை என்று பதில் கூறாமல், ``தமிழிழை ஜெயிக்க வேண்டும் என்றும் நினைக்கவில்லை. தோற்க வேண்டும் என்றும் நினைக்கவில்லை. நாம் முன்னரே சொல்லிவிட்டேன் அவரை என்னால் தலைவராக எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. சக பெண்ணாக மட்டும் அவர் ஜெயிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார். ``தமிழக பா.ஜ.க மாநில தலைவராக இருக்கும் தமிழிசையை தலைவராக ஏற்றுக் கொள்ளாமல் உங்களை பா.ஜ.க நிர்வாகி என்று எப்படி சொல்வீர்கள்’’ என இணையவாசிகள் காயத்ரியை விமர்சித்து வருகின்றனர்.