குக்கர் சின்னம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை இறுதித் தீர்ப்பை வழங்க உள்ள நிலையில் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற பெரும் எதிர்பார்ப்பில் அமமுக தொண்டர்கள் உள்ளனர். இதனால் தீர்ப்பு வெளியான பின்னர் நாளை மறுநாள் வேட்பு மனுவுக்கு நாள் குறித்துள்ளார் தினகரன்.
தேர்தல் அறிவித்துவிட்டதால் அமமுக குக்கர் சின்னம் வழங்குவது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. கடந்த 18-ந் தேதி நடந்த விசாரணையில் தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து 25-ந் தேதிக்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனால் தேர்தல் ஆணையத்தின் பதிலைப் பொறுத்துத்தான் குக்கர் சின்னம் கிடைக்குமா? கிடைக்காதா? என்பது தீர்ப்பில் தெரிய வரும். என்றாலும் குக்கர் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அமமுகவினரிடம் இன்னமும் உள்ளது.எ
எனவே தீர்ப்பு வரும் வரை பொறுத்திருப்போம். அதன் பின் வேட்பு மனுத்தாக்கலுக்கு கடைசி நாளான நாளை மறுதினம் ஒட்டு மொத்த மாக அனைத்து வேட்பாளர்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய தயாராக இருங்கள் என்று தினகரன் அறிவித்துள்ளார். தீர்ப்பில் குக்கர் சின்னம் மீண்டும் கிடைத்து விட்டால் வேட்பு மனுத்தாக்கல் நிகழ்ச்சியையே பெரிய வெற்றிவிழா போல் நடத்தி விடுவது என்றும் அமமுகவினர் திட்டமிட்டுள்ளனராம்.