சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் வேட்பு மனு தாக்கல் செய்த போது அங்கிருந்த சுயேட்சை வேட்பாளரை வெளியேற்றிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
நீண்ட இழுபறிக்கு பின் வெளியிடப்பட்ட காங்கிரஸ் பட்டியலில் சிவகங்கை தொகுதி மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது . இந்த தொகுதியில் தன் மகனுக்கு 'சீட்' கேட்டிருந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் . கார்த்திக் சிதம்பரம் மீது சி.பி.ஐ வழக்கு இருப்பதால் ,அவருக்கு அந்த தொகுதியை வழங்க கூடாது என ,முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் வலியுறுத்தி வந்தார் .
இந்நிலையில் சிவகங்கை தொகுதியில் கார்த்திக் சிதம்பரம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவார் என தகவல் வெளியானது. இதையடுத்து பேசிய சுதர்சன நாச்சியப்பன் "சிதம்பரம் குடும்பத்தினரை மக்கள் வெறுக்கின்றனர், நீதி மன்றத்திற்கு செல்ல வேண்டியவர் வேட்பு மனு தாக்கல் செய்தால் என்ன நடக்குமோ?" எனக் கூறினார். கார்த்திக் சிதம்பரம் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற போது, ஏற்கனவே அங்கு வேட்பு மனு தாக்கல் செய்ய அமர்ந்திருந்த சுயேட்சை வேட்பாளரை "நல்ல நேரம் முடிய போகிறது முதலில் என் மனுவை வாங்குங்கள்" என அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார் . இதனால் ஆத்திரமடைந்த சுயேட்சை வேட்பாளர்,விதி முறைகளை மீறிய கார்த்திக் சிதம்பரம் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.
சுதர்சன நாட்சியப்பன் கூறிய படியே இந்நிகழ்வு நடைபெற்றதால், ,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .