ஐபிஎல்லின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரஹானே முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். இதில் ராகுல் முதலிலேயே அதிர்ச்சி கொடுத்து வெறும் 4 ரன்களுக்கு வெளியேறினார். இருப்பினும் கெய்ல் நிலைத்து நின்றார். அவருக்கு மாயங் அகர்வால் சிறிது நேரம் கம்பெனி கொடுத்தார்.அகர்வால் 22 ரன்களில் வெளியேறிய பின்பு, சர்ப்ராஸ் கான் கெய்லுக்கு பக்க பலமாக நின்றார். சிறப்பாக விளையாடிய கெய்ல் அரை சதம் கடந்தார் கடந்தார். சிக்ஸர், பவுண்டரி காட்டிய கெய்ல் 79 ரன்கள் எடுத்திருந்த போது அவுட் ஆனார். இருப்பினும் இளம் வீரர் சர்ப்ராஸ் கான் கடைசி வரை நிலைத்து நின்றார்.
அவரின் ஆட்டத்தால் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. சர்ப்ராஸ் கான் 46 ரன்களுடன் களத்தில் இருந்தார். ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணிக்கு ரஹானே - பட்லர் ஜோடி துவக்கம் கொடுத்தது. இருவரும் நிதானமாக இன்னிங்சை துவக்கினர். அரை சதம் கடந்து சென்ற இந்த பாட்னர்ஷிப்பை அஸ்வின் பிரித்தார். 29 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் ரஹானேவை அவர் அவுட் ஆக்கினார். இருப்பினும் அடுத்து வந்த சஞ்சு சாம்சன் உடன் கூட்டணி அமைத்து பட்லர் விளையாடினார். அரை சதம் அடித்த பட்லரை 69 ரன்கள் எடுத்த போது அஸ்வின் ரன் அவுட் செய்ய ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது.
பால் டேம்பரிங் விவகாரத்தால் தடையில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இந்த ஆட்டத்தில் ஏமாற்றினார். பட்லர், சஞ்சு சாம்சனை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பஞ்சாப் 14 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. பஞ்சாப் அணி தரப்பில் சாம் குர்ரான், ரஹ்மான் ஆகியோர் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.