மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்ஷா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இந்த மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சும் இயக்கம் திமுக இல்லை என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீப காலமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய நாள் முதல் அவர் செல்லும் இடமெங்கும் மக்கள் அவருக்கு அளிக்கும் ஆதரவும், வரவேற்பையும் கண்டு தாங்க முடியாமல், தான் ஒரு முதலமைச்சர் என்பதையும் மறந்து பொறுப்பற்ற முறையில் அவரது தேர்தல் பிரச்சார உரைகள் அமைந்துள்ளன.
ஒவ்வொரு கூட்டத்திலும் எடப்பாடி மீதும் அவரது அமைச்சர்கள் மீதும் அடுக்கடுக்கான ஊழல் புகார்களை ஆதாரத்தோடு நிரூபிக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் வைக்கும் வாதங்களுக்கு பதில் சொல்லத் திராணியற்ற எடப்பாடி பழனிச்சாமி மக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் பேசி வருகிறார்.
கொடநாட்டில் நடைபெற்ற கொலை குறித்து இவர்மீது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களைத் தர இயலாத எடப்பாடி, ஏற்கனவே சி.பி.ஐ.யால் முடித்து வைக்கப்பட்ட வழக்கு என்பது கூட ஒரு முதலமைச்சருக்கு தெரியவில்லை என்பது வேடிக்கையாக இருக்கிறது.
ஏதோ இவர் ஜெயலலிதாவை விட தன்னை புத்திசாலியாக நினைத்துக் கொண்டு தேர்தல் நேரத்தில் சாதிக்பாட்ஷா மரணத்தை குறித்து விசாரணை நடத்துவேன் என்று சொல்கிறார். விசாரணை கமிஷன்களை கண்டு எந்த காலத்திலும் அஞ்சாத ஒரு இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை எடப்பாடிக்கு தெரியா விட்டால் தெரிந்தவர்களை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.
இவர் விசாரணை நடத்தும் முன்னர், சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் இவர் மீதுசுமார் ரூபாய் 3,500 கோடி அளவுக்கு ஊழலுக்கு உரிய முகாந்திரம் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால், வீரம் பேசும் எடப்பாடி ஓடோடிச் சென்று அதற்கு உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளார். இதிலிருந்தே இவர் எவ்வளவு பெரிய யோக்கியர் என்று நாட்டு மக்களுக்கு தெரியும்.
எடப்பாடியும் அவரது சகாக்களும், எப்படிப்பட்டவர்கள் என்பதை திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் நீதிமன்றம் கூறியிருக்கும் தீர்ப்பை பார்த்தால் தெரியும். சாதிக்பாட்ஷா மரணம் குறித்து விசாரிக்க போவதாக மிரட்டல் விடுவதைக் கண்டு திமுக ஒருபோதும் அஞ்சவும் இல்லை, இதுவரை திமுக மீது போடப்பட்ட பொய் வழக்குகளை, அத்தனை வழக்கிலும் வென்று காட்டிய பெருமை திமுகவுக்கு மட்டுமே உண்டு. எந்த விசாரணை கமிஷனையும் திமுக சந்திக்க தயார் என்று ஆர்.எஸ்.பாரதி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.