சுமார் 30 ஆயிரம் உலக வரைபடங்களை அழித்துள்ளது சீன அரசு.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை அண்டை நாடான சீனா பல ஆண்டுகாலகளாக உரிமை கோரி வருகிறது. அந்நாட்டின் அரசு ஆவணங்களில் அருணாச்சல பிரதேசத்தை தங்கள் பகுதி என்றே அடையாளப்படுத்தியுள்ளது. இதற்கு இந்தியா பல முறை கண்டனம் தெரிவித்தும் சீனா இதுபோன்ற சம்பவங்களை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்தநிலையில் அருணாசலப்பிரதேசம் மற்றும் தைவான் ஆகிய பகுதிகளை சீனாவின் பகுதியாகக் குறிப்பிடாத உலக வரைபடங்களை அந்நாட்டு சுங்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றி அழித்திருக்கிறார்கள். இந்த வரைபடங்கள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வைக்கப்பட்டிருந்தவை. இதன் எண்ணிக்கை 30,000 இருக்கும். இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மட்டுமல்ல, தைவானையும் சீனாவின் பகுதி எனக் குறிப்பிடவில்லை எனக் கூறி இந்த வேலையை செய்திருக்கிறது சீன அரசு.
இதனை சீன அரசின் அதிகாரபூர்வ நாளேடான குளோபல் டைம்ஸ் செய்தியாக வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்த சீனா வெளியுறவுத்துறை பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்டங்களுக்கானத் துறைத் தலைவர் பேராசிரியர் லியூ வென்சாங், ‘தவறான தகவல்களை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த அந்த உலக வரைபடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. உலக வரைபடங்களை அழித்த விவகாரத்தில் சீனா செய்தது சரியான ஒன்று மற்றும் தேவையான ஒன்று. ஒரு நாட்டுக்கு இறையான்மையும், பிராந்திய ஒருமைப்பாடும் தான் முக்கியமான ஒன்று. சர்வதேச சட்டத்தின்படி தைவான் மற்றும் தெற்கு திபேத் ஆகிய பகுதிகள் சீனாவின் பகுதி’ என்று தெரிவித்துள்ளார்.