துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு சுயநலவாதி. அதிமுகவில் இருந்த போது தேர்தலில் போட்டியிட்ட தமக்கு ஆதரவு தராத ஓ.பன்னீர்செல்வம், இப்போது தமது மகனுக்காக குடும்பத்துடன் தெருத்தெருவாக பிரச்சாரம் செய்கிறார் என்று தேனி தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிடும் தங்க. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ்.இளங்கோவனும், அமமுக சார்பில் தங்க.தமிழ்ச்செல்வனும் போட்டியிடுவதால், மும்முனைப்போட்டியில் தேர்தல் களம் சூடாகிக் கிடக்கிறது.
போட்டி கடுமையாக இருப்பதால் முதல் சில நாட்கள் மகனுடன் ஊர், ஊராகச் சென்று ஓ.பன்னீர்செல்வம் ஓட்டு வேட்டை நடத்தினார். தற்போது ஓபிஎஸ்சின் மனைவி, மருமகள்கள் மற்றும் தம்பி குடும்பத்து பெண்கள் என ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து ரவீந்திரநாத்துக்கு ஓட்டுக்கேட்டு வருகின்றனர்.
இன்று தேனி தொகுதிக்கு உட்பட்ட சோழவந்தான் பகுதியில் அமமுக வேட்பாளர் தங்க. தமிழ்ச்செல்வன் ஓட்டு வேட்டை நடத்தினார். அப்போது ஓபிஎஸ் குடும்பத்தினர் ஓட்டுக் கேட்டு செல்வது குறித்து தங்க .தமிழ்செல்வன் கூறுகையில், அதிமுகவில் இருந்த போது மூன்று முறை ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதியிலும், ஒரு முறை மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். ஆனால் ஒரு தடவை கூட எனக்கு ஆதரவாக ஓபிஎஸ் பிரச்சாரம் செய்ததில்லை. அம்மா இருந்த காலத்திலேயே ஓபிஎஸ் எனக்கு எதிராகவே செயல்பட்டார். இப்போது அவரது மகனை எதிர்த்து நான் போட்டியிடுவதால் ஓபிஎஸ்சுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. இதனால் ஓபிஎஸ்சும் அவருடைய குடும்பத்தினரும் தெருத்தெருவாக கும்பிடு போட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓபி எஸ் எப்போதுமே சுயநலவாதி என்பதை இப்போதும் நிருபித்துள்ளார் என்று தங்க .தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.