வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டி - சோலார் மோசடி புகழ் நடிகை தடாலடி அறிவிப்பு

Election 2019, Kerala actress Saritha Nair announces contesting in Wayanad Loksabha against Rahul Gandhi

by Nagaraj, Apr 3, 2019, 12:55 PM IST

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் கேரளாவின் வயநாடு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக சோலார் பேனல் மோசடி புகாரில் சிக்கிய பிரபல நடிகை சரிதா நாயர் அறிவித்துள்ளார்.

உ.பி.மாநிலம் அமேதியில் போட்டியிடும் காங்கிரல் தலைவர் ராகுல் காந்தி, திடீரென கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். தென்னிந்திய மக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் இருக்கிறது என்பதை உணர்த்துவதற்காக வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாக ராகுல் காரணமும் கூறியிருந்தார். ராகுல் போட்டியிடுவதால் அகில இந்திய அளவில் வயநாடு தொகுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து ஆளும் இடது முன்னணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுனீர் போட்டியிடுவார் என்று அற்விக்கப்பட்டுள்ளது. பாஜகவும் பாரத தர்ம ஜன சேனா அமைப்பின் தலைவர் தூஷார் வெல்லபள்ளியை நிறுத்தியுள்ளது.

இந்நிலையில் தானும் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக நடிகை சரிதா நாயர் அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

வயநாடு தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக போட்டியிடவில்லை. ராகுலை எதிர்த்து போட்டியிடுவதால் நல்ல விளம்பரம் கிடைக்கும். அதன் மூலம் கேரள காங்கிரஸ் தலைவர்களின் மோசடி, ஊழல், பாலியல் லீலைகளை அம்பலப்படுத்த நல்ல வாய்ப்பு என்பதால் போட்டியிடுவதாக சரிதா நாயர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே எர்ணாகுளம் மக்களவைத் தொகுதியில்
காங்கிரஸ் வேட்பாளர் ஹிபி ஈடனை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடப் போவதாக, சரிதா நாயர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் சோலார் பேனல் முறைகேடு வழக்கில் நடிகை சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது இந்த முறைகேடு புகார் எழுந்தது. இதனை விசாரிக்க கமி‌ஷனும் அமைக்கப்பட்டது.

இந்த வழக்கில் கைதான சரிதா நாயர் பல மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர், காங்கிரஸ் அரசில் அமைச்சர்களாக இருந்த பலரும் பண மோசடி செய்ததாக குற்றம்சாட்டினார். மேலும் உம்மன் சாண்டி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹிபி ஈடன் ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர் கூறினார்.

கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, சரிதா நாயர் தெரிவித்த பாலியல் புகார் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் ஹிபி ஈடன் உள்பட பலர் சேர்க்கப்பட்டனர். ஹிபி ஈடன் மீதான வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அவர், எர்ணாகுளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கு சரிதா நாயர் எதிர்ப்பு தெரிவித்தார்.

பாலியல் புகாரில் சிக்கிய ஹிபி ஈடனை வேட்பாளராக அறிவித்துள்ளதை ஏற்க முடியாது என்று கூறிவந்த சரிதா நாயர், எர்ணாகுளம் தொகுதியில் ஹிபி ஈடனை எதிர்த்து சுயேச்சையாக களம் இறங்க உள்ளதாக கூறிய நிலையில் தற்போது வயநாடு தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்து பரபரப்பை கூட்டியுள்ளார்.

You'r reading வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டி - சோலார் மோசடி புகழ் நடிகை தடாலடி அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை