முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு ஏப்ரல் 25-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 913 கோடிக்கு மேலாக இருக்கும் சொத்துக்களை நிர்வகிக்க, நிர்வாகி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று புகழேந்தி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜனவரி 2-ம் தேதி நடந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு மற்றும் கடன் மதிப்பினை அறிக்கையாகத் தாக்கல் செய்யுமாறு வருமானவரித்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கைத் தள்ளி வைத்தனர் நீதிபதிகள்.
இந்நிலையில், புகழேந்தி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. இதில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்கள் மற்றும் கடன் விவரங்களை வரும் ஏப்ரல் 25-ம் தேதிக்குள் வருமான வரித்துறை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.