மக்களவைத் தேர்தல் தொடர்பான டிவி விவாதத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக செய்தித் தொடர்பாளர்களிடையே நடந்த காரசார விவாதம் மோதலாக வெடித்தது. அவதூறாக பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கண்ணாடி தண்ணீர் டம்ளரை விசிறியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
தேர்தல் நாள் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகளிடையே பதற்றமும் அதிகரித்துள்ளது. தனி நபர் விமர்சனங்களால் அரசியல் தரமும் தாழ்ந்து போய்க் காணப்படுகிறது. இதே போன்று டிவி விவாதங்களிலும் அனல் பறக்கிறது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள பிரபல டிவி சேனல் ஒன்றில், இந்திய ராணுவத்தினரை மோடியின் படை என்று உ.பி.முதல்வர் யோகி ஆதித்ய நாத் கூறியது குறித்த விவாதம் நேரலையில் நேற்றிரவு ஒளிபரப்பானது. இதில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அலோக் சர்மா, பாஜக செய்தித் தொடர்பாளர் கே.கே.சர்மா மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் இரண்டு பேர் பங்கேற்றிருந்தனர்.
அப்போது, பாஜக செய்தித் தொடர்பாளரும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர். பின்னர் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தத் தொடங்கினர். இதையடுத்து நிகழ்ச்சித் தொகுப்பாளர், இருவரின் மைக்குகளையும் ஆப் செய்தார்.. அப்போது, பாஜக செய்தித் தொடர்பாளர் கே.கே.சர்மா, காங்கிரஸ் செய்தி தொடர்பாளரை, துரோகி என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அவர், அங்கு வைக்கப்பட்டிருந்த கண்ணாடி தண்ணீர் தம்ளரை எடுத்து கே.கே.சர்மா மீது வீசினார். பறந்து சென்ற தம்ளர் குறி தவறி அருகில் இருந்த முன்னாள் ராணுவ வீரரின் டேபிள் விழுந்து உடைந்து நொறுங்கியது.
இதில் ராணுவ வீரரின் போனும் உடைந்ததுடன்,நிகழ்ச்சி தொகுப்பாளரின் உடையும் நனைந்துவிட்டது. நல்ல வேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதையடுத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளரை இந்த செயலுக்கு மன்னிப்புக் கேட்கச் சொன்னார் நிகழ்ச்சித் தொகுப்பாளர். சிறிது நேர வாக்குவாதத்துக்கு பின் மன்னிப்புக் கேட்ட காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், தம்மைப் பற்றி மோசமான வார்த்தையால் விமர்சித்த பாஜக செய்தித் தொடர்பாளரும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார். ஆனால் பாஜக செய்தித் தொடர்பாளர் மன்னிப்பு கேட்க மறுத்து வாக்குவாதம் செய்து விட்டு வெளியேறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் இப்போது வைரலாகி வருகிறது.