திமுக பிரமுகர்களுக்குச் சொந்தமான வீடு, பள்ளி, கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடைபெறுமா? அல்லது ரத்தாகுமா? என்பது பற்றி தலைமை தேர்தல் ஆணையம் நாளை முடிவு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் வீடு அவருக்குச் சொந்தமான பள்ளி, கல்லூரிகளில் கடந்த வாரம் வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் அதிரடி சோதனை நடத்தி ரூ 10 லட்சம் மட்டுமே பிடிபட்டது ஆனால் அடுத்த இரு தினங்களில் துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக பிரமுகர்களுக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது.
இதில் சீனிவாசன் என்பவரின் சிமெண்ட் குடோனில் 10 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்துக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் என்று பகீர் தகவல்கள் வெளியாகின. இதனால் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்த விவகாரம் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வேலூரில் துரைமுருகன் வீடு மற்றும் நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக ஒரு அறிக்கையை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளார். வேலூரில் கைப்பற்றப்பட்ட பணம் அனைத்தும் வாக்காளர்களுக்கு விநியோகிக்க இருந்தது என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் வருமான வரித்துறையும் இந்திய | தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த அறிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையம் நாளை காலை ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. அதில், வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடைபெறுமா? ரத்தாகுமா? என்ற அறிவிப்பு வெளிவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.