அய்யாக்கண்ணு விக்கெட்டை வீழ்த்திய பாஜக - மோடியை எதிர்த்து போட்டியில்லை என அறிவிப்பு

Tn farmers not contesting against pm modi in Varanasi, Ayyakkannu announced

by Nagaraj, Apr 8, 2019, 09:45 AM IST

பிரதமர் மோடிக்கு எதிராக தமிழக விவசாயிகளை திரட்டி டெல்லியில் பல நூதனப் போராட்டங்களை நடத்திய அய்யாக்கண்ணு, பாஜகவிடம் சரணாகதி அடைந்துள்ளார். மோடியை எதிர்த்து, அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் 111 தமிழக விவசாயிகளை களமிறக்கப் போவதாக வீராவேசக் குரல் கொடுத்த அய்யாக்கண்ணு இப்போது போட்டியில்லை என்று தடாலென பின் வாங்கியுள்ளார்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் என்ற பெயரிலான சங்கத்தின் தலைவராக இருப்பவர் அய்யாக்கண்ணு. தமிழக விவசாயிகளை மத்திய அரசு வஞ்சிக்கிறது. காவிரி பிரச்னையில் பிரதமர் மோடி ஓரவஞ்சகம் செய்கிறார் என்றெல்லாம் கூறி டெல்லியில் இவர் நடத்திய நூதனப் போராட்டங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. பிரதமர் மோடி தமிழக விவசாயிகளை அழைத்துப் பேசி, பிரச்னைகளை காது கொடுத்தாவது கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மாதக்கணக்கில் தமிழக விவசாயிகள் பலருடன் டெல்லி வீதிகளில் கோவணாண்டி வேஷத்தில் போராடிப் பார்த்தார்.

இந்தப் போராட்டத்திற்கு தேசிய அளவில் முக்கியத்துவம் கிடைத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் ஆதரவளித்தனர். ஆனாலும் கடைசி வரை மத்திய அரசோ, பிரதமர் மோடியே ஏறெடுத்தும் பாராத நிலையில், விரக்தியின் உச்சிக்கே சென்ற அய்யாக்கண்ணு அன் கோ விவசாயிகள், டெல்லியில் பாராளுமன்றம் அருகே முழு நிர்வாணமாக தரையில் விழுந்து புரண்டு விட்டு தமிழகம் திரும்பினர்.

இந்நிலையில் தான் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை வஞ்சம் தீர்க்கப் போகிறேன் பேர்வழி என்று கூறி, மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டி என தடாலடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அய்யாக்கண்ணுவின் இந்த அறிவிப்பு பாஜக தரப்பை ஏகத்துக்கும் டென்ஷனாக்கியது. பல முனைகளில் இருந்து அய்யாக்கண்ணுவை தொடர்பு கொண்டு சமாதானம் பேசினர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனோ, அய்யா அய்யாக்கண்ணு அவர்கள் தயவு செய்து அப்படியெல்லாம் முடிவெடுக்காதீர்கள் என்று பகிரங்கமாகவே வேண்டுகோள் விடுத்தார்.

அய்யாக்கண்ணுவும், டெல்லியிலிருந்து பல்வேறு துறை அதிகாரிகள் யார் யாரோ பேசுகிறார்கள். என்ன பிரச்னை கூறுங்கள், தீர்த்து வைக்கிறோம் என்று சொல்கிறார்கள். நமக்கு பிரச்னை தீர்ந்தால் சரி என்று எங்கள் கோரிக்கைகளை கூறியிருக்கிறோம் என்று சில தினங்களுக்கு முன் கூறியிருந்தார்.

இந்நிலையில் தான் டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை திடீரென சந்தித்தார் அய்யாக்கண்ணு. இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி தான். அமித் ஷாவுடனான சந்திப்பில் நடந்த மாயம் என்னவோ தெரியவில்லை, அய்யாக்கண்ணு பாஜகவிடம் மொத்தமாக சரணாகதி அடைந்து விட்டார். மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவிப்பையும் கூலாக வெளியிட்டு பின் வாங்கி விட்டார். அய்யாக்கண்ணு பாணியிலேயே சொல்வதென்றால், எப்படியோ தமிழக விவசாயிகள் பிரச்னை தீர்ந்தால் சரிதான்.

 

அட்லீயின்  செயலால் `தளபதி 63’ படம் பாதியில் நிற்கும் அபாயம்! கண்டுகொள்வாரா விஜய்

 

You'r reading அய்யாக்கண்ணு விக்கெட்டை வீழ்த்திய பாஜக - மோடியை எதிர்த்து போட்டியில்லை என அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை