புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நள்ளிரவில் மர்ம நபர்களால், பெரியார் சிலையின் தலை மட்டும் தனியாக துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அரசு மருத்துவமனை அருகே பெரியாரின் முழு உருவச்சிலை அமைந்துள்ளது. மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைப்படி பெரியாரின் சிலையும் துணியால் மூடப்பட்டிருந்தது.
இதனிடையே பெரியார் பொதுவான தலைவர் என்பதால் அவரது சிலை மீது மூடப்பட்டிருந்த துணியை அகற்றலாம் என தலைமைத் தேர்தல் ஆணையர் அனுமதி அளித்திருந்தார். அதன்படி துணியால் மூடப்பட்டிருந்த பெரியார் சிலையை கடந்த 3 நாட்களுக்கு முன்பு திராவிடர் கழக நிர்வாகிகள் அகற்றியுள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை பெரியார் சிலையின் தலைப் பாகம் மட்டும் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு கீழே கிடந்தது. இதனையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
மேலும் உடைந்த சிலையை மூடி வைக்க போலீசார் முயற்சி செய்தபோது தி.க. வினர் ஆட்சேபித்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை சிலை திறந்தே இருக்க வேண்டும் என்று தெரிவித்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.இதனால் சிலையை மூடும் நடவடிக்கையை போலீசார் எடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.