கருணாநிதிக்கு உரிய சிகிச்சை வழங்காமல் 2 ஆண்டுகள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப் போவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென அறிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையேயான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் தனிநபர் தாக்குதலாக மாறி தரம் தாழ்ந்து சென்று கொண்டுள்ளது. எடப்பாடியை உதவாக்கரை, கொலைகார அரசு, கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வந்தவர், மண் மழு, விஷ வாயு என்றெல்லாம் மு.க.ஸ்டாலின் விமர்சிக்க, பதிலுக்கு எடப்பாடியும், நான் விவசாயி. மண் புழுவும் விவசாயியின் நண்பன். அதனால் மண்புழு ஒன்றும் கேவலமானதில்லை என்றும், தாம் படிப்படியாக அரசியலில் வளர்ந்து உயர்ந்த இடத்தை பிடித்ததாகவும் தெரிவித்து, மு.க.ஸ்டாலினை விஷக்கிருமி என்றெல்லாம் பதிலடி கொடுத்து வருகிறார். இனியும் தம்மை விமர்சித்தால், நான் திருப்பித் தாக்குதல் கொடுத்தால் ஸ்டாலின் காது ஜவ்வு கிழிஞ்சிரும் என்றும் எடப்பாடி எகிறினார்.
இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் கூறியதற்கு ஏட்டிக்குப் போட்டியாக கருணாநிதி மரணம் குறித்து விசாரிக்க வேண்டி வரும் என்று எடப்பாடி இன்று திடீரென வம்புக்கிழுத்துள்ளார்.
நீலகிரி தொகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, கருணாநிதி நன்றாக இருந்தால், தான் தலைவராக முடியாது என எண்ணி அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் 2 ஆண்டுகள் வீட்டிலையே சிறைவைத்தவர் ஸ்டாலின்.
கருணாநிதிக்கு ஏன் பேசமுடியாமல் போனது?. அவரை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருந்தால் அவர் குணமாகி இருப்பார் என்பதை அவரது கட்சிக் காரர்களே கூறுகின்றனர்.
முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில், வீட்டுச் சிறையில் கருணாநிதி வைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும். அவருக்கு சில கொடுமைகள் நடந்துள்ளதாக தகவல்கள் வருகிறது, இதனை விசாரிக்க வேண்டியது அரசின் கடமை என்று எடப்பாடி பழனிச்சாமி தடாலடியாக அறிவித்து கருணாநிதி மரணத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.