கர்நாடக மாநிலத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைத்து மக்களவைத் தேர்தலை சந்திக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா, மாநிலக் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பிரதமர் வேட்பாளராக சந்திரபாபு நாயுடுவை பிரதமராக்க வேண்டும் என்று கூறி காங்கிரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.
கடந்தாண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் தனித்தனியே போட்டியிட்டன. ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பின் பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக, குறைந்த எம்எல்ஏக்களை பெற்றிருந்த மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமிக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்து கூட்டணி ஆட்சிக்கு சம்மதித்தது காங்கிரஸ்.
தற்போது மக்களவைத் தேர்தலிலும் இரு கட்சிகளும் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டாலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்த தேவகவுடா ஆரம்பம் முதலே தயக்கம் காட்டி வருகிறார். இந்நிலையில் வரும்11-ந் தேதி சட்டசபைக்கும், மக்களவைக்கும் ஒரு சேர தேர்தல் நடக்கிறது. அங்கு ஆளும் தெலுங்கு தேச கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவகவுடா, சந்திரபாபு நாயுடு தான் பிரதமர் பதவிக்கு லாயக்கானவா என்று கூறி, காங்கிரசுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக கூறி ஏமாற்றிய பாஜகவை புறக்கணித்து விட்டு தெலுங்கு தேசம் கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்ற தேவகவுடா,சந்திரபாபு நாயுடுவின் தலைமையை நாடு எதிர்நோக்கியுள்ளதாகவும், நாடு இக்கட்டான தருணத்தில் உள்ளதால் சந்திரபாபு நாயுடு இந்த சவாலை ஏற்க வேண்டும் எனப் பேசினார்.
நாட்டின் பிரதமராக சந்திரபாபு நாயுடு ஏன் பொறுப்பேற்கக் கூடாது என கேள்வி எழுப்பிய அவர், மோடியை எதிர்க்கும் சவாலை யார் ஏற்பார்கள் என விவாதம் நடத்தப்பட்டதாகவும், இந்த சவாலை ஏற்கக் கூடிய ஒரே நபர் சந்திரபாபு நாயுடு தான் என்றும் கூறினார். மக்களவைத் தேர்தலில் மாநில கட்சிகள் ஒன்றிணைந்து சந்திரபாபு நாயுடுவை பிரதமராக்க வேண்டும் என்றும் தேவகவுடா வலியுறுத்தியுள்ளார். தேவகவுடாவின் இந்த அறிவிப்பு காங்கிரஸ் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.