மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பாஜக அரசு தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி இன்னும் ஓரிரு நாளில் என்னையும் கைது செய்ய முயற்சிக்கலாம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், எந்தக் காரணமும் இன்றி ஆந்திர மாநிலத்தின் தலைமைச் செயலரை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.
அரசு அதிகாரிகளை கொண்டு அதிகார துஷ்பிரயோக நடவடிக்கைகளில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார். தலைமைச் செயலரை தேர்தல் ஆணையம் நீக்கியதன் பின்னணியில் மோடியே உள்ளார். இன்றோ அல்லது நாளையோ என்னையும் கூட சதி செய்து கைது செய்ய முயற்சிப்பார். ஆனால், அதற்கெல்லாம் நான் அடிபணியமாட்டேன் என ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கூறினார்.
மேலும், நேற்று இரவு நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, வருமான வரித்துறை, சிபிஐ, ரிசர்வ் வங்கி மற்றும் தேர்தல் ஆணையம் என அனைத்து துறைகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மோடி அராஜகம் செய்கிறார் என குற்றம்சாட்டினார்.
தேர்தல் ஆணையம் முதலில் கலெக்டரை இடமாற்றம் செய்தது. அதன்பிறகு, டிஜிபி உள்ளிட்ட மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்தது. இப்படி, பாஜகவுக்கு தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் செய்து வருவதாகக் கூறிய சந்திரபாபு தன்னையும் அவர்கள் கைது செய்யலாம் என ஆவேசமாக தேர்தல் பிரசாரத்தில் கூறினார்.