ஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் மிரட்டியதால் அங்குள்ள சுமார் 15 வாக்குச்சாவடிகளில் ஒருத்தர் கூட வந்து ஓட்டு போடவில்லை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டத்தில் ஒடிசா உள்ளிட்ட 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. ஒடிசாவில் நேற்று மக்களவை தேர்தலோடு சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது. ஒடிசாவில் மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் உள்ளது. மாவோயிஸ்ட்டுகள் மக்கள் ஓட்டு அளிக்க கூடாது என்று மிரட்டி இருந்தனர்.
மாவோயிஸ்ட்கள் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளிலும் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும், மக்கள் தைரியமாக வந்து வாக்களிக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. நேற்று காலை முதல் நபரங்பூர், கோரபுத், கலஹந்தி, பெர்ஹாம்பூர் உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவுகள் நடைபெற்றன.
ஆனால் மாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தல் காரணமாக மால்கன்கிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 15 வாக்குச்சாவடிகளில் ஒருவர் கூட வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்யவில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.