சிறு மற்றும் குறுதொழில்களை அழித்தது, 4.7 கோடி பேர் வேலை இழந்தது போன்றவை தான் பிரதமர் மோடியின் உண்மையான சாதனை என்று ப.சிதம்பரம் கடுமையாக தாக்கியுள்ளார்.
வரும் வியாழக்கிழமையன்று தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பிரதமர் மோடி தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார். பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் பிரதமர் மோடியின் தமிழக தேர்தல் பிரசாரத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், மோடி நாடு முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் சாதனைகள் எனக் கூறி கொண்டு சுயதம்பட்டம் அடிக்கிறார்.
அவர் அப்படியே தனது உண்மையான சாதனைகளான பண மதிப்பிழப்பு, சிறு மற்றும் குறு தொழில்களை அழித்தது, 4.7 கோடி பேர் வேலை இழந்தது, பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர், பழங்குடியினர், எழுத்தாளர்கள், கலைஞர்கள், என்.ஜி.ஓ.கள் உள்ளிட்டோர் நாட்டில் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் நிலை குறித்தும் அவர் பேசலாம்.
பிரதமர் மோடி தேர்தல் நெருங்க நெருங்க தனது குரலை உயர்த்தி பேசி வருவது ஏன்? தனது ஆட்சி போய் விடும் என்ற பயமா? தமிழகத்தில் நேற்று முன்தினம் பேசிய மோடி, நீட் தேர்வு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, நெடுவாசல் எரிவாயு சோதனைத் திட்டம், அ.தி.மு.க. அரசு மீது பதிவான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து அவர் பேசவே இல்லை. இவ்வாறு அதில் பதிவு செய்துள்ளார்.