மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தான் மற்ற கட்சிகளை விட அதிகமான பேங்க் பேலன்ஸ் வைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி வங்கி கணக்கில் 669 கோடி ரூபாய் உள்ளது.
கடந்த பிப்ரவரி 25-ம் தேதி தேர்தல் ஆணையத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சொத்து விபரப் பட்டியலில், தங்கள் கட்சிக்கு சொந்தமான மொத்தம் 8 வங்கி கணக்கில் 669 கோடி ரூபாய் உள்ளதாக அறிவித்துள்ளது.
அதன் கூட்டணி கட்சியான சமாஜ்வாதி கட்சி 471 கோடி ரூபாயுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் காங்கிரஸ் கட்சி 196 கோடி ரூபாயுடன் 3ம் இடத்திலும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 107 கோடி ரூபாயுடன் 4ம் இடத்திலும் உள்ளன.
ஆளுங்கட்சியான பாஜக வங்கி கணக்கில் வெறும் 82 கோடி மட்டுமே இருக்கிறதாம். மேலும், சிபிஎம் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் வங்கி கணக்கில் 3 கோடி ரூபாய் உள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளன.
மேலும், 87 சதவிகித சொத்துக்கள் தனிநபர் நன்கொடை மூலம் இந்த கட்சிகளுக்கு கிடைத்துள்ளன எனவும் தெரிவித்துள்ளன.
இந்த கட்சிகள் தாக்கல் செய்துள்ள விபரங்களின் உண்மைத் தன்மையை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளுமா என்பது கேள்விக்குறிதான்.