தருமபுரி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 12 குற்றவழக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். 14 குற்ற வழக்குகளுடன் முதலிடத்தில் சுயேட்சை வேட்பாளர் ஈஸ்வரன் உள்ளார்.
இரண்டாம் கட்டமாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் பங்கு கொள்கின்றன. வரும் 18-ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், மாற்றத்திற்கான ஜனநாயக அமைப்பு (ADR) தமிழகத்தில் போட்டியிடும் 802 வேட்பாளர்கள் குறித்த ஆய்வை நடத்தியது. அந்த ஆய்வின் முடிவில் 67 வேட்பாளர்கள் மீது அதிகளவிலான கடும் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 12 குற்ற வழக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். 14 குற்றவழக்குகளுடன் ஈரோட்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஈஸ்வரன் முதலிடத்தில் உள்ளார்.
தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் 184 பேர் கோடீஸ்வர வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 417 கோடி ரூபாய் சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா 237 கோடி ரூபாய் சொத்துகளுடன் இரண்டாவது இடத்திலும், ஏ.சி. சண்முகம் 126 கோடி ரூபாய் சொத்துகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
இதில், திமுக சார்பில் போட்டியிடும் 23 வேட்பாளர்கள், அதிமுக சார்பில் போட்டியிடும் 22 வேட்பாளர்கள், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 19 பேர், சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 12 பேர் கோடீஸ்வர வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7 பேர், பாஜகவை சேர்ந்த 5 பேர் மற்றும் பாமகவை சேர்ந்த 4 பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள்.