ஏ கிராமங்களுக்குத்தான் எல்லாம்! மேனகா மீண்டும் சர்ச்சைப் பேச்சு!!

Maneka Gandhi outlines ABCD formula for villages in poll meet

Apr 15, 2019, 16:45 PM IST

‘‘பா.ஜ.க.வுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் எத்தனை ஓட்டு விழுகிறதோ, அதற்கேற்றபடிதான் வேலை நடக்கும்’’ என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறார்.

 

பா.ஜ.க.வில் ஏடாகூடமாக பேசும் ஆட்களுக்கு பஞ்சமே இல்லை. ராமரைப் பற்றியும், இந்துக்கள், முஸ்லிம்கள் என்று தரம் பிரித்து பேசி வம்பு இழுப்பதில் அவர்களை யாரும் மிஞ்ச முடியாது. இதில் மத்திய பெண்கள் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகாகாந்தியும் ஒருவர். கடந்த முறை உ.பி.யில் பிலிபித் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அவர் இந்த முறை சுல்தான்பூரில் போட்டியிடுகிறார். பிலிபித் தொகுதியில் அவரது மகன் வருண் காந்தி போட்டியிடுகிறார்.


இந்நிலையில், சுல்தான்பூரில் அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு பிரச்சாரம் செய்த போது, ‘முஸ்லிம்கள் எனக்கு ஓட்டு போடாவிட்டால் என்னிடம் எந்த வேலைக்கும் வரக் கூடாது. ஓட்டு போடுவதும் கொடுக்கல், வாங்கல் மாதிரித்தான். ஓட்டு போட்டால்தான், நான் பதவிக்கு வந்த பின்பு என்னிடம் எதையும் கேட்டு வர வேண்டும்’’ என்று பேசினார். ஓட்டு போடாத முஸ்லிம்களுக்கு எதையும் செய்ய மாட்டேன் என்று அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையமும் அவரிடம் விளக்கம் கேட்டிருக்கிறது.


ஆனாலும், மேனகா காந்தி அடங்கி விடவில்லை. இன்று அவர் தனது மகன் வருண்காந்தியின் பிலிபித் தொகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும் போது, ‘‘பிலிபித் தொகுதியில் நாங்கள்தான் எப்போது ஜெயிப்போம். எங்களுக்கு ஓட்டு போடும் கிராமங்களை தரம்வாரியாக பிரிப்போம். எங்களுக்கே 80 சதவீத ஓட்டு போட்ட கிராமங்களை ‘ஏ’ என்றும், 60 சதவீத ஓட்டு போட்ட கிராமங்களை ‘பி’ என்றும், 50 சதவீத ஓட்டு போட்ட கிராமங்களை ‘சி’ என்றும் பிரிப்போம். அதற்கும் கீழ் ஓட்டு போட்டால் ‘டி’ தான். ஆனால், ‘ஏ’ கிராமங்களுக்குத்தான் எல்லாமே செய்யப்படும். எனவே, நல்ல வேலைகள் உங்கள் கிராமத்திற்கு நடக்க வேண்டுமானால், ‘டி’ கிராமமாக இருக்கக் கூடாது. அதை யாரும் விரும்ப மாட்டீர்கள்தானே! எனவே, நீங்களே முடிவெடுத்து கொள்ளுங்கள்’’ என்று மேனகா காந்தி பேசினார்.
இதன்மூலம், தனக்கு ஓட்டு போடாத கிராமங்களுக்கு எந்த வசதியும் செய்து தரப்படாது என்று இப்போதே அறிவித்திருக்கிறார். இதுவும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

You'r reading ஏ கிராமங்களுக்குத்தான் எல்லாம்! மேனகா மீண்டும் சர்ச்சைப் பேச்சு!! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை