உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் இரண்டு தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் இறுதியில் இங்கிலாந்தில் தொடங்குகிறது. உலக கோப்பையை எடுத்து நடத்தும் இங்கிலாந்து அணி நேரடியாகப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா, பங்களாதேஷ், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் என மொத்தம் 10 அணிகள் இந்த உலகக்கோப்பையில் பங்குபெறுகின்றன.
உலக கோப்பை தொடங்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணைகள் வெளியிட்டுள்ளன. இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்குபெறும் இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது.
முன்னதாக, உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், 2-வது விக்கெட் கீப்பர் போட்டியில் ரிஷாப் பான்ட், தினேஷ் கார்த்திக் இருந்தனர். அதேபோல், நான்காம் நிலை பேட்ஸ்மேன்களுக்கான போட்டியில் அம்பத்தி ராயுடு, விஜய் சங்கர், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இருந்தனர். இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், விராட் கோலி தலைமையில் ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்) , ஷிகர் தவான், கே.எல்.ராஹுல், விஜய் ஷங்கர் , தோனி, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்த்ரா சாஷல், குல்தீப் யாதவ் , புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ரவிந்த்ர ஜடேஜா, மொஹ்த் ஷமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.