வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் தேர்தல் நடக்கிறது. அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், வாக்காளர்களுக்குப் பணம் விநியோகத்தை தடுக்கும் வகையில் புதுச்சேரியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் டி.அருண் வெளியிட்ட அறிவிப்பில், ‘தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் இன்று (ஏப்.,16) மாலை 6 மணி முதல் வரும் 19ம் தேதி காலை 6 மணி வரை புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் படுகிறது. ஆகையால், ஐந்து மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் சாலையில் செல்ல அனுமதி இல்லை எனவும் ஆயுதங்கள், பேனர்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை எனத் தெரிவித்தார். இதனால், புதுச்சேரியில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது.
முன்னதாக, தேனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் வாக்காளர்களுக்கு தொடர்ந்து பணம் பட்டுவாடா செய்து வருவதாக புகார் எழுந்து வருகிறது. இதனால், புதுச்சேரி போல் தேனியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.