தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதி தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் இன்று நிறைவடைந்ததது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
எல்லா தொகுதியிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து முடித்து விட்டார்கள். தேர்தல் ஆணையம் எதையுமே தடுக்கவில்லை. அது ஒரு நாடகக் கம்பெனியாக உள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம். பணம் வாங்கினால் சிறைத்தண்டனை என்று தேர்தல் ஆணையம் சொன்னதே! எத்தனை பேரை சிறைக்கு அனுப்புனாங்க? அரவக்குறிச்சி, ஆர்.கே.நகர் தேர்தலில் எல்லாம் அதிகமா பணம் கொடுத்து விட்டார்கள் என்று சொல்லித்தானே தேர்தலை தள்ளி வைத்தீர்கள்? அப்ப பணம் கொடுத்தவர்கள், வாங்குனவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
இப்போதும் துரைமுருகன் வீட்டில் மட்டும் ரெய்டு நடத்தி பணம் எடுத்திருக்கிறீர்கள். மற்ற ஒரு வேட்பாளர் வீட்டிலும் பணமே இல்லையா? யாருமே பணம் செலவழிக்கவில்லையா? இப்படியே போனால், மக்களுக்கு ஜனநாயகம், தேர்தல் ஆணையம் என்று எல்லாவற்றின் மீதும் வெறுப்புதான் வரும்.
கல்வி, மருத்துவம், பேருந்து என்று எல்லாவற்றையும் தனியார்தான் சிறப்பாக செய்ய முடியும் என்று அவர்களிடமே விட்டு விட்டீர்கள். அதே போல, தேர்தல் ஏன் நடத்துறீங்க. பேசாம அதானிக்கு நாட்டை ஏலம் விட்டு, அஞ்சு வருஷம் ஆளச் சொல்லுங்க. அப்பறம் அம்பானிக்கு ஏலம் விடுங்களேன்...
இப்படியாக பொரிந்து தள்ளினார் சீமான்.