நாளை மறுநாள் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரங்கள் முடிவடையவுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்து வருகின்றன.
நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது, தனக்கே உரித்தான பாணியில் கவிதைகளை பதிவிடுவார். அதன் அர்த்தம் சிலருக்கு புரிந்தும் பலருக்கு புரியாமலும் இருப்பது இயல்பே.
தற்போது, தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் பார்த்திபன்,
”மாம்பழமோ? மாபெரும் பழமோ?
பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகளுக்கு,,,,
தேர்தல்= தேத்துதல் (பணம்)
வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை உங்களுக்கு
வீசுகிறார்கள் அதுகூட
திமிங்கல வேட்டைக்கே.
காசு வாங்காமல் ஓட்டு போடுவோம்-மேலிடத்தில் ரூபா வாங்காத
கட்சிக்கு!”
என ஒரு பதிவிட்டுள்ளார். இது மூலம் அவர், பாமகவின் மாம்பழம் சின்னத்தை குறிப்பிட்டு சொல்கிறார் என ஒரு கூட்டமும், அவர் பொதுப்படையாக சொல்கிறார் என இன்னொரு கூட்டமும் ட்விட்டரில் சண்டையிட்டு வருகிறது.
ஆனால், அவர் சொன்னதில், ”வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை உங்களுக்கு வீசுகிறார்கள் அதுகூட திமிங்கல வேட்டைக்கே” என்பது நிச்சயம் அனைத்து கட்சிகளுக்கும் மக்களுக்கும் நன்றாகவே புரிந்திருக்கும்.
இந்த சர்ச்சையை சரிகட்ட, அதற்குள் இன்னொரு ட்வீட்டையும் அவசர அவசரமாக நடிகர் பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.
அதில்,
”ஓட்டைப் போடாதீர்கள்
ஓட்டைப் போடாதீர்கள்
வல்லரசாகப் போகும்
இந்தியாவின் கூகுள்
வரைபடத்தில்
ஓட்டைப் போடாதீர்கள்
தேர்தல் வந்துடுச்சி
துட்டுக்கு ஓட்டைப்போட்டு
நம் பிள்ளைகளின் ஆரோக்கிய வாழ்வில்
(Scan report-டில்)
ஓட்டைப் போடாதீர்கள்”
என தேர்தலுக்கு பணம் வாங்கிக் கொண்டு தங்களது வாக்குகளை விற்க வேண்டாம் எனவும் நடிகர் பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.
எல்லாம் ஓகே.. சார்.. அந்த மாம்பழம்.. பாமக கட்சியை குறிப்பிடுகிறதா.. இல்லையா.. என விளக்கி விட்டீர்கள் என்றால்.. நல்லா இருக்கும்.