ராமதாஸை மேடையில் வைத்துக் கொண்டே ஆப்பிள் சின்னம் என்று உளறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

by Nagaraj, Mar 30, 2019, 21:32 PM IST

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறல் மாமன்னன் என்பதை தொடர்ந்து நிரூபித்த வண்ணம் உள்ளார். இப்போது பாமக தலைவர் டாக்டர் ராமதாஸை மேடையில் வைத்துக் கொண்டே மாம்பழம் சின்னத்துக்குப் பதிலாக ஆப்பிள் சின்னத்துக்கு ஓட்டுக் கேட்டு உளறி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்தது முதல் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு என்ன ஆனதோ தெரியவில்லை, தொடர்ந்து உளறிக் கொட்டி வருகிறார். அப்பல்லோவில் அம்மா இட்லி சாப்பிட்டாங்க.. உப்புமா தின்னாங்க... ஜூஸ் குடிச்சாங்க...னு சொன்னதெல்லாம் பொய் மக்களே.. மன்னிச்சுடுங்க மக்களே... என்று என்றைக்கு கையெடுத்து கும்பிட்டு கும்பிட்டாரோ அது முதல் அடிக்கடி ஒரே உளறல் தான்.

ராகுல் காந்தியை மோடியின் பேரன் என்றார். பிரதமர் மோடி தாக்கல் செய்த பட்ஜெட் என்பதற்குப் பதிலாக இறந்து போன வாஜ்பாய் பெயரை ஒரு தடவை உச்சரித்தவர், மற்றொரு தடவை மன்மோகன் சிங் என்று உளறினார்.


இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் சின்னத்தின் பெயரையே மாற்றிக் கூறி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் ஜோதிமுத்து வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டம் கன்னிவாடியில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பாமக வேட்பாளருக்கு ஆப்பிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று பேசினார். இதைக் கேட்ட கூட்டத்தினர் மாம்பழம்... மாம்பழம்.. என்று கூச்சலிட்டனர். நானே, அய்யய்யோ... அப்படியா சொல்லிட்டேன்... பிரஸ்காரங்களுக்கு செய்தி கிடைச்சுருச்சு.. திண்டுக்கல் சீனிவாசன் உளறல் என்று செய்தி போட்டுரு வாங்க என்றபடி, மாம்பழம் சின்னம் என்று திருத்திப் பேசினார்.

அப்போது மேடையில் இருந்த பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், திண்டுக்கல் சீனிவாசன் சின்னத்தை மாற்றிப் பேசியதை சரியாக கவனிக்கவில்லை. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டவுடன், தன் அருகிலிருந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் என்னவென்று கேட்க, திண்டுக்கல் சீனிவாசன் சின்னத்தை மாற்றிக் கூறியதை எடுத்துக் கூறினார். அதற்கு ஓ அப்படியா ? என்று ராமதாஸ் கேலிச் சிரிப்பு சிரித்தார்.

திண்டுக்கல் சீனிவாசன் தான் வழக்கம் போல் உளறுகிறார் என்றால் தற்போது தேர்தல் பிரச்சாரக் களத்தில் முதல்வர் எடப்பாடி முதல் தலைவர்கள் பலரும், வேட்பாளர்களும் கூட பதற்றத்தில் பெயரை, சின்னத்தை, கட்சியை மாற்றிப் பேசுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.


More Tamilnadu News