டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10வது லீக் ஆட்டம் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து கொல்கத்தா அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்தது. கொல்கத்தா அணிக்கு நிகில் நாயக், கிறிஸ் லின் இணை துவக்கம் தந்தது. இந்த ஜோடி மந்தமாக ஆடியது. இருவரும் சொதப்பலாக விளையாடி சொற்ப ரன்களில் வெளியேறினர். அவர்களை தொடர்ந்து வந்த வந்த உத்தப்பா மற்றும் ராணா ஆகியோர் கைகொடுக்க தவறினர். ராணா ஒரு ரன்னிலும், உத்தப்பா 11 ரன்களிலும் வந்த வேகத்தில் வெளியேறினர். இதனால் கொல்கத்தா அணி தடுமாறியது.
இருப்பினும் அதிரடி வீரர் ரஸ்ஸல் மற்றும் கேப்டன் தினேஷ் கார்த்திக் இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தனர். குறிப்பாக ரஸ்ஸல் டெல்லி அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தார். 28 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்து ரஸ்ஸல் அவுட் ஆனார். இதேபோல் தினேஷ் கார்த்திக்கும் 50 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இருவரின் ஒத்துழைப்பால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணி 185 ரன்கள் குவித்தது. டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.