தமிழகத்தின் பல பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டதால், எதிர்க்கட்சிகளுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி தேர்தல் மற்றும் 18 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் இன்று நடைபெறுகின்றன. தமிழகம் முழுவதும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
ஆனால், பல ஊர்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை. அதனால், வாக்குப்பதிவு தொடங்கவே காலதாமதம் ஏற்பட்டது. சில ஊர்களில் வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் இயந்திரங்கள் பழுதாகி விட்டன.
சென்னையில் நந்தனம் உள்பட பல வாக்குச்சாவடிகள், கோவை, ஸ்ரீவில்லிப்புத்தூர், அம்பாசமுத்திரம், சத்தியமங்கலம், கடலூர், கன்னியாகுமரி, நாகை, வேதாரண்யம், திருவண்ணாமலை வேங்கிக்கல், பல வாக்குச்சாவடிகள் என்று பல ஊர்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாக காணப்பட்டன. தலைஞாயிறு வாக்குச்சாவடியில் இயந்திரம் பழுதானதால், அமைச்சர் ஓ.எஸ்.மணியம் காத்திருக்க வேண்டியதாயிற்று. இதே போல், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், பெரியகுளத்தில் வாக்குச்சாவடியில் காத்திருக்க வேண்டியதாயிற்று.
இதற்கு முந்தைய தேர்தல்களில் இந்த அளவுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்ததில்லை. இதனால், வாக்குப்பதிவு இயந்திரங்களில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு அதிக வாக்குகள் விழும் அளவுக்கு ஏதாவது செட்டப் செய்திருப்பார்களோ என்ற சந்தேகம், எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஆனால், இந்த தேர்தலில்தான் முதல் முறையாக விவிபாட் என்றழைக்கப்படும் யாருக்கு வாக்களித்தோம் என்ற ஒப்புகைச்சீட்டு இயந்திரமும் வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால்தான், இயந்திரங்களை கையாள்வதில் பிரச்னை ஏற்பட்டு பழுது ஏற்படுவதாக வாக்குச்சாவடி அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனாலும், எதிர்க்கட்சிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.