ஓட்டு சிலிப் முறையாக வழங்கப்படாததால், வாக்காளர்கள் பலர் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படுவதால், விரக்தியில் பலர் வாக்களிக்காமலே திரும்புகின்றனர். இதனால் நகர்ப்புற பகுதியில் வாக்குப்பதிவு படு மந்தமாக உள்ளது.
முன்னர் எல்லாம் தேர்தலுக்கு ஓரிரு நாட்கள் முன்பே, போட்டியிடும் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களை தேடிச் சென்று பூத் சிலிப் களை வழங்குவது வாடிக்கையாக இருந்தது. பூத் சிலிப் கொடுக்கிற சாக்கில், ஓட்டுக்கு பணப்பட்டு வாடாவும் பெய்ய ஆரம்பித்தால், அரசியல் கட்சியினர் பூத் சிலிப் வழங்க தடை போட்டுவிட்டது தேர்தல் ஆணையம் .
கடந்த சில தேர்தல்களில் தேர்தல் ஆணையமே பூத் சிலிப் அச்சிட்டு தேர்தல் பணியாளர்கள் மூலம் வாக்காளர்களுக்கு வழங்கி வருகிறது. ஒவ்வொரு வாக்காள்களுக்கும் வீடு தேடிச் சென்று பூத் சிலிப் வழங்க வேண்டும் என்பது நடைமுறை. கிராமப்புறங்களில் இந்த நடைமுறை சாத்தியப்பட்டாலும், நகர்ப்புறங்களில் சரிவர பூத் சிலிப் வழங்கப்படவில்லை.
இதனால் வெறுமனே அடையாள அட்டையுடன் சென்ற வாக்காளர்களை வரிசையில் நிற்கக் கூட அனுமதிக்காமல், பூத் சிலிப்புடன் வருமாறு கூறி அலைக்கழித்தனர். பூத் சிலிப் வழங்க வாக்குச்சாவடி முன்பும் அமர்ந்திருக்க வேண்டிய தேர்தல் பணியாளர்களும் முறையாக பதிலளிக்காமல் இங்கும், அங்கும் அலைக்கழிக்க வெறுப்பில் பலர் வாக்களிக்காமலே திரும்ப, நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவு மிக மந்தமாகி உள்ளது.