ஜனநாயகக் கடமை ஆற்றும்படி ஒருபக்கம் வலியுறுத்திவிட்டு, இன்னொருபுறம் அரசு காட்டும் இந்த அலட்சியம் வேதனைக்குறியது என அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு, நாளை புனித வெள்ளி, பின், சனி-ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை உள்ளதால் சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்து வருகின்றனர். இதனால், அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு ஓட்டுப் போடச் செல்லும் பயணிகளுக்கு 1,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பேருந்து கிடைக்காமல் பயணிகள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டிடிவி தினகரன் ட்விட்டர் பக்கத்தில், ‘’சென்னை மாநகரில் பணிநிமித்தமாக வசிக்கும் மக்கள், வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு செல்ல ஆர்வமாக இருந்தனர். ஆனால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போதுமான பேருந்து வசதி செய்யப்படாததால் நேற்று இரவு அவர்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்துகள் வராததால், கோபமடைந்த மக்கள் சாலை மறியல் செய்துள்ளனர்.
அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் போதிய பேருந்து வசதிகளை அதன்பிறகாவது செய்யத்தவறிய அதிகாரிகள், காவல்துறையை வைத்து பொதுமக்கள் மீது தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது. ஜனநாயகக் கடமை ஆற்றும்படி ஒருபக்கம் வலியுறுத்திவிட்டு, இன்னொருபுறம் அரசு காட்டும் இந்த அலட்சியம் வேதனைக்குறியது. தங்கள் சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்பவாவது அவர்களுக்கு போதிய பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ எனப் பதிவிட்டுள்ளார்.