கர்நாடகா முதல்வர் குமாரசாமி வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தியது அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 11ம் தேதி நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடந்து வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர்,கர்நாடகா, மஹாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிஷா, புதுச்சேரி, தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலையொட்டி, பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நாடுமுழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சோதனையில், பல கோடிகள் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா பகுதியில், முதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டர் மற்றும் அதில் இருந்த உடைமைகளைத் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
முன்பு இதேபோல், பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டரில் மூலம் ஷிவமொக்கா மாவட்டத்துக்குப் பிரசாரத்துக்கு சென்றபோது முதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை செய்தனர். தற்போது மீண்டும் குமாரசாமியின் ஹெலிகாப்டரை சோதனை செய்துள்ளனர் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்.
குமாரசாமியிடம் நடத்திய சோதனையில் இதுவரை எதுவும் சிக்கவில்லை என்றபோதும் ஒரு மாநில முதல்வரை இப்படி அடிக்கடி சோதனை செய்வது முறையல்ல என்ற விமர்சனம் எழுந்து வருகிறது.