நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்கும் முன், அவருக்கு வலது கை விரலில் மை வைக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து விசாரிக்கப்படும் என்று சத்யப்பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டசபைத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் சதவீதம் குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹூ இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் ஒரு நிருபர், ‘‘நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்கும் முன்பு அவரது வலது கை விரலில் அடையாள மை வைக்கப்பட்டது. இது வீடியோக்களிலும் பதிவாகியுள்ளது. வலது கையில் மை வைத்தது தேர்தல் விதிமீறல் இல்லையா?’’ என்று கேட்டார்.
அதற்கு சத்யப்பிரதா சாஹூ பதிலளிக்கையில், ‘‘தேர்தல் விதிமுறைப்படி வாக்காளர்களுக்கு இடது கையின் ஆட்காட்டி விரலில்தான் அடையாள மை வைக்கப்பட வேண்டும். அதில் வைக்க முடியவில்லை என்றால் (காயம் உள்ளிட்ட காரணங்களால்), நடுவிரலில் வைக்க வேண்டும். ஆனால், வலது கை விரலில் வைக்கக் கூடாது. இது சாதாரண தவறுதான். இருந்தாலும் இது பற்றி விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.