4 தொகுதி இடைத்தேர்தலுக்கு கட்சிகள் ஆயத்தம் ஆகி வருகின்றன. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிந்ததை அடுத்து, 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி உள்ளன. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் அடுத்த மாதம் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில், வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கையை அ.தி.மு.க தொடங்கி உள்ளது. அதன் வகையில், 4 சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை (ஏப்., 21) விருப்ப மனு அளிக்கலாம் என முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
4 தொகுதிக்கான தி.மு.க வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இடைத்தேர்தல் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து, நான்கு தொகுதிகளிலும் ஆதரவு திரட்டும் பணியை தி.மு.க-வினர் தொடங்கி உள்ளனர். பிற கட்சி வேட்பாளர்களும் ஓர் இரு நாளில் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. மக்களவைத் தேர்தல் பணிகள் முடிந்துவிட்டதால் தமிழகத்தில் அனைத்து கட்சித் தலைவர்களின் கவனமும் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகள் மீது திரும்பி உள்ளது. இதனால், விரைவில் நான்கு தொகுதிகளிலும் பிரசாரம் களைகட்ட உள்ளது.