தங்களுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று பா.ஜ.க. தொடர்ந்து கூறி வருவதைப் பார்த்து எதிர்க்கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. வாக்கு எந்திரங்களில் பா.ஜ.க.வுக்கு அதிக வாக்குகள் விழும் வகையில் ‘செட்டப்’ பண்ணியிருப்பார்களோ என்று பயந்து மீண்டும் 21 கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நாட்டில் குறிப்பாக தென்மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு அலை காணப்பட்டாலும் கூட, தங்களுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் என்று பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும் கூறி வருகின்றனர். இதனால், வாக்கு எந்திரங்களில் மோசடி நடக்குமோ என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
ஏற்கனவே வாக்கு எந்திரம் ஏதாவது ‘செட்டப்’ செய்து விடுவார்களோ என்று எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்பியதால்தான் விவிபாட் எனப்படும் ஒப்புகைச் சீட்டு காட்டும் எந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. வாக்களித்தவர் தாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அந்த எந்திரத்தில் பார்த்து விட்டு வரலாம். இந்த எந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் எதிர்க்கட்சிகளுக்கு சந்தேகம் தீரவில்லை.
இதனால், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு தலைமையில் 21 முக்கிய கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தனர். அதில், வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் போது, 50 சதவீத வாக்குகளை ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி சரிபார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், தேர்தல் கமிஷனோ அப்படி 50 சதவீத வாக்குகளை சரிபார்த்தால் முடிவுகளை வெளியிடுவதற்கு நான்கைந்து நாட்களாகி விடும் என்று எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, ஒரு வாக்குச்சாவடிக்கு 5 ஒப்புகைச் சீட்டு என்ற அடிப்படையில் சரிபார்த்தால் போதும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 8ம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையி்ல், பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும் தங்களுக்கு கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் விழுந்த வாக்குகளை விட இன்னும் அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்று கூறி வருகின்றனர். அமித்ஷா நேற்று பிரதமரின் வாரணாசி தொகுதியில் பா.ஜ.க., ஊடக மையம் ஒன்றையும், மோடியின் தேர்தல் அலுவலகத்தையும் தொடங்கி வைத்தார். அதன்பின்பு, அவர் கூறுகையில், ‘‘இது வரை நடந்து முடிந்துள்ள 3 கட்ட தேர்தல்களின் வாக்குப்பதிவை பார்க்கும் போது பா.ஜ.க. மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று தெரிகிறது. 2014ல் கிடைத்ததை விட இன்னும் அதிகமான வாக்குகளை பா.ஜ.க. பெறும்’’ என்றார்.
இதற்கிடையே, பல மாநிலங்களிலும் வாக்குப்பதிவின் போது வாக்கு எந்திரங்களிலும், விவிபாட் எந்திரங்களிலும் கோளாறு ஏற்பட்டன. மேலும், வாக்கு எந்திரத்தில் ஏதோ பிரச்னை உள்ளது என்று சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ் என்று பல்வேறு முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் குற்றம்சாட்டினர். மேலும், சந்திரபாபு நாயுடு தலைமையில் 21 கட்சிகளின் தலைவர்கள் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறார்கள்.
அதில், ‘‘எல்லா இடங்களிலும் வாக்குப்பதிவின் போது எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. எனவே, ஒரு வாக்குச்சாவடிக்கு 5 ஒப்புகைச்சீட்டுகளை மட்டும் சரிபார்ப்பது மிகவும் குறைவானது. இது வெறும் 2 சதவீதம்தான். இது மக்களுக்கு நம்பிக்கையைத் தராது. குறிப்பிடத்தக்க அளவிலாவது ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்தால் மட்டுமே தேர்தல் முறையாக நடந்துள்ளது என்று நம்ப முடியும். எனவே, இதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியுள்ளனர். விரைவில் விசாரணைக்கு வரவுள்ள இந்த வழக்கில் எதிர்க்கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி வாதாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.