அதிமுகவுக்கு விரோதமாக, கட்சியை பாதிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டபட்ட எம்.எல்.ஏ-கள் விளக்கம் அளித்துள்ளனர்.
அ.தி.மு.க கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படியில், டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ-கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவாகியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட வட்டாரங்கள் பரபரப்பாகியுள்ளன. இந்த நடவடிக்கைக்கு, ஆட்சியை தக்க வைத்து கொள்ள, அ.தி.மு.கவின் புதிய திட்டம் என எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
இதனிடையில், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய மூவரும், எதிர் அணி அமமுக-வின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் இருக்கும் புகைப்பட ஆதாரங்களை, சபாநாயகர் தனபாலிடம் அளித்துள்ளதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை, அதாவது தகுதிநீக்கம் செய்ய மனு அளித்துள்ளதாக அ.தி.மு.க கொறடா ராஜேந்திரன் தெரிவித்திருக்கிறார்.
கொறடா ராஜேந்திரனின் புகார் மனுவை அடுத்து, கருத்து தெரிவித்துள்ள எம்.எல்.ஏ கலைச்செல்வன், ‘அரசுக்கு எதிராக தாம் செயல்படவில்லை. இரட்டை இலைக்கு ஆதரவாகவே இருக்கிறேன், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடவில்லை; உள்நோக்கத்துடன் எங்கள் மீது கொறடா ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார்’ என்று கூறியுள்ளார்.
இவரை தொடர்ந்து, எம்.எல்.ஏ பிரபு, ‘சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டால் அதற்கு விளக்கம் தருவோம்; சபாநாயகரின் நோட்டீஸ் கிடைத்த பிறகு அதனடிப்படையில் எனது முடிவு இருக்கும்’ எனக் கூறியுள்ளார்.