முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த நபர் அதிமுக ஊராட்சி செயலாளர் ஒருவரின் மகன் என்பது தெரியவந்துள்ளது.
கொடைக்கானலில் வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் நேற்று போன் செய்திருந்தார். இதனையடுத்து, கொலை மிரட்டல் விடுத்த அந்த நபரைக் கண்டுபிடிக்கும் தேடல் பணியை கிரைம் பிரிவு போலீஸார் தீவிரப் படுத்தினர். முதற்கட்ட விசாரணையில், அந்த தொலைப்பேசி அழைப்பு திண்டுக்கல்லில் இருந்து வந்ததாக தெரிந்தது. அதன்படி, திண்டுகளை சேர்ந்த சந்துரு என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இவரிடம், நடத்திய விசாரணையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் குருசங்கர் என்பது கண்டறியப்பட்டது. இவர், திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள விராலிப்பட்டி பகுதியை சேர்ந்த அதிமுக ஊராட்சி செயலாளர் ராமமூர்த்தியின் மகன் ஆவார்.
இதனையடுத்து, அவரை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு கொடைக்கானல் சென்றிருந்ததாகவும், அதனை அறிந்த தந்தை ராமமூர்த்தி, கொடைக்கானலுக்கு வந்து அவரிடம் சண்டையிட்டு, அப்பணத்தை திரும்ப எடுத்துச் சென்றதாக கூறினார். தந்தையின் மேல் இருந்த கோபத்தினால், சென்னை காவல் கட்டுப்பட்டு அறைக்கு போன் செய்து முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வாக்கு மூலம் அளித்துள்ளார். மேலும்,தந்தையை கதிகலங்கச் செய்யவே தாம் இவ்வாறு செய்ததாக கூறினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொலை மிரட்டல் விடுவது இது முதல் முறையல்ல. கடந்த மார்ச் 18ம் தேதி சென்னை காவல் கட்டுப்பட்டு அறைக்கு அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் போன் செய்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீஸார் முதல்வர் வீட்டில் சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.