தேர்தல் முடிவுகள் வந்த பின்பு, ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க.வில் சேர்ந்து விடுவார் என்று அ.ம.மு.க. கொள்கைபரப்பு செயலாளர் தங்கத்தமிழ்ச் செல்வன் கூறியிருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 4 பக்கத்திற்கு ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார். அதில், ‘‘என் கனவிலும் நான் எதிர்பாராத உயரங்களை தந்த இந்த இயக்கத்தை விட்டு நான் பா.ஜ.க.வுக்கு செல்லப்போகிறேன் என்று ஒரு அடுக்காத புரளி அவதூறாக பரப்பப்படுகின்றன.இது முட்டாள்தனமான குற்றச்சாட்டு என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் சொன்னது முட்டாள்தனமானது என்று ஓ.பி.எஸ். சொல்கிறார். அப்ப நிருபர் கேட்கும் போது, 'தவறான செய்தி என்று சொல்லிவிட்டு போகலாமே! எதற்காக 4 பக்கத்துக்கு பெரிய விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிடுகிறார்? மடியில் கனமிருந்தால்தானே பயம் வரும்?
இப்பவும் சொல்கிறேன், அவர் பா.ஜ.க.வில் சேரப் போவது நூறு சதவீதம் உண்மை.
அவர் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களை காப்பாற்றிக் கொள்வதற்காக நிச்சயமாக பா.ஜ.க.வில் சேருவது உறுதி. இதே ஓ.பி.எஸ். தானே எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற போது அவருக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்தார். இப்ப இருவரும் சேர்ந்து செயல்படுவதாக சொல்கிறார்கள். அப்படித்தான் அவர் மாறுவார் என்றார் தங்கத்தமிழ்ச் செல்வன்.