கனவிலும் எதிர்பாராத உயரங்களை அடைந்தேன் ஆனால்... தங்க தமிழ்ச்செல்வனால் வருந்தும் ஓபிஎஸ்

o panneerselvam talks about varanasi visit

by Sasitharan, May 1, 2019, 22:06 PM IST

பிரதமர் மோடி தனது வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு, வாரணாசியில் பிரம்மாண்ட பேரணி ஒன்றை நடத்தினார். இந்த பேரணியில், பாஜகவின் முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் குமார்(தேனி வேட்பாளர்) கலந்து கொண்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளானது. இதுகுறித்து பேசிய தங்க தமிழ்செல்வன், ``தன் மகனுக்கு எம்.பி பதவி; தனக்கு ஆளுநர் பதவி வேண்டும் என்பதற்காக மோடி நடத்திய பேரணியில் ஓபிஎஸ் கலந்துகொண்டு உள்ளார். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் ஓபிஎஸ் வாரணாசி சென்றிருப்பாரா..? தற்போது ஓபிஎஸ் அதிமுகவில் இல்லை பாஜகவில் இணைந்து விட்டார்" என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

ஆனால் இதற்கு விளக்கமளித்த ஓபிஎஸ்ஸோ, ``நான் பாஜக-வில் இணைந்து உள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறுவது முட்டாள் தனமான கருத்து; தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்ததே அவர் கருத்துக்கு நான் பதில் சொல்வதே இல்லை. அதனால், அவர் கருத்துக்கு நான் பதில் கூற மாட்டேன். நல்லவர்களுக்கு மட்டுமே நான் பதில் சொல்வேன்" எனக் கூறினார். இவர் விளக்கமளித்தாலும் இந்த சர்ச்சை ஓயாமல் இருந்தது. தொடர்ந்து அவர் மீது விமர்சனம் எழுந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் மீண்டும் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார் ஓபிஎஸ். இந்த விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``நான் பாஜகவுக்கு செல்கிறேன் என்பது வடிகட்டிய பொய். உயிர்போகும் நாளில் அதிமுக கொடியை போர்த்துவதையே என் வாழ்நாளில் பெருமையாக கருதுகிறேன். என் மீது பரப்பப்படும் அவதூறுகளையும், குற்றச்சாட்டுகளையும் அதிமுக தொண்டர்களும், மக்களும் ஏற்கமாட்டார்கள். மெகா கூட்டணி ஈட்ட இருக்கும் வெற்றியை நினைத்து சில குள்ளநரிகள் என் மீது வதந்தி பரப்புகின்றனர். என் மீது வதந்தி பரப்பி என் அரசியல் வாழ்க்கையை காயப்படுத்த அலைவதை நினைத்து வேதனைப்படுகிறேன். அதிமுகவில் எளிய தொண்டனாக இருந்து கனவிலும் எதிர்பாராத உயரங்களை அடைந்தேன். பாஜகவுக்கு செல்லப்போகிறேன் என அடுக்காத புரளியை அவதூறாக பரப்புகின்றனர்" எனக் கூறியுள்ளார்.

You'r reading கனவிலும் எதிர்பாராத உயரங்களை அடைந்தேன் ஆனால்... தங்க தமிழ்ச்செல்வனால் வருந்தும் ஓபிஎஸ் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை