25 ஆண்டுகள் ஆனாலும் திமுக-வால் ஆட்சியை பிடிக்க முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரங்கள் விறுவிறுப்பாகி உள்ளது. வரும் மே 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஆகையால், திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்நிலையில், சூலூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து சூலூர் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது, பேசிய அவர், '2 நாட்களுக்கு முன்பு பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் 25 நாட்களில் புதிய முதல்வரை உருவாக்கிக் காட்டுவேன் எனக் கூறியிருக்கிறார். வேலூர் தொகுதியில் அவரது மகனை எம்.பி ஆக வேண்டும் என்று மிகவும் முயற்சி செய்தார்.அதற்காக, குறுக்கு வழியில் சென்றார்.
அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் 12 கிலோ தங்கம், ரூ.13 கோடியைக் கைப்பற்றினர். எவ்வாறு, துரைமுருகனுக்கு இவ்வளவு பணம் வந்து என்று மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 25 நாட்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக கூறி வருகிறது. 25 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க.வால் ஆட்சியைப் பிடிக்க முடியாது. இதனை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் கேபிள் டிவி கட்டண உயர்வுக்கு திமுக தலைவரின் குடும்பம் தான் காரணம். அதிமுக அல்ல' என்று பேசினார்.