டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் மீது சட்டப் பேரவை சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கக் கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் திங்கட்கிழமை விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் 3 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சூடு பிடித்துள்ளது.
22 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பாதகமாக வந்து விட்டால் ஆட்சியைத் தக்க வைக்க பல அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறது அதிமுக அரசு .அதன் ஒரு கட்டமாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களாக உள்ள அறந்தாங்கி ரத்தினசாமி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகிய 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் மூலம் நெருக்கடி கொடுக்கப்பட்டு, விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுக தரப்பின் சூழ்ச்சியை தெரிந்து கொண்ட திமுகவும் உஷாராகி, எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் கொடுத்த அன்றே, சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொடுத்துவிட்டது திமுக தரப்பு.
நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிலுவையில் இருக்கும் போது சபாநாயகர் தனது அதிகாரத்தை பயன்படுத்த முடியாது. 3 எம்எல்ஏக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது என்பது திமுக போடும் கணக்கு . ஆனாலும் இதையெல்லாம் கணக்கில் கொள்லாமல், சபாநாயகர் தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளதால், இன்று உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளதால், 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது மரபு. அவ்வாறு மரபுகளை மீறி சபாநாயகர் நடவடிக்கை முயன்றால் அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் திமுக தரப்பில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமை (6-ந்தேதி) நடைபெறும் என அறிவித்துள்ளார்.
ஏற்கனவே அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் திமுக தரப்பு கொந்தளிப்பது ஏன்?, திமுகவுக்கும் அமமுகவுக்கும் இடையே உள்ள உறவு வெளிப்பட்டு விட்ட என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் தினகரன் ஆதாவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை கூடாது என வக்காலத்து வாங்கி திமுக தரப்பு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ள விவகாரம் தமிழக அரசியலில் மேலும் விறு விறுப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.