சபாநாயகர் தனபால் மீது திமுக கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் 3 பேருக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியதற்கு, திமுக கண்டம் தெரிவித்ததோடு, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர சட்டப்பேரவை செயலாளரிடம் மனு அளித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க கூடாது, அதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் திமுக இன்று வழக்கு தொடர்ந்துள்ளது. இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று திமுக தரப்பு முறையிட்டது. இதனையடுத்து, கோரிக்கையை ஏற்று வரும் திங்கள்கிழமை (மே 6) வழக்கை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்.
இந்நிலையில், சபாநாயகர் மீது திமுக கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். ஏற்கனவே, தேர்தல் முடிவுக்கு பிறகு பா.ஜ.க அல்லது கங்கிரஸுக்கு ஆதரவு அளிப்பதாகவும், ஆனால் நிபந்தனைகள் அடிப்படையில்தான் ஆதரவு இருக்கும் என்றும் குறைந்தபட்சம் எந்த கட்சி தமிழகத்தின் பிரச்சினையை காது கொடுத்து கேட்கிறதா அந்த கட்சிக்கு ஆதரவு அளிப்போம் என கமல்ஹாசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.